சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்த பின் சசிகலா அளித்த பேட்டியில், அதிமுகவில் தற்போது சாதி வந்துவிட்டது. சாதி பார்க்கும் வழக்கம் தற்போது அதிமுகவில் வருவதை அனுமதிக்க முடியாது. அதிமுக இன்று மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்று கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு செல்ல யார் காரணம்? அதிமுக முடிந்து விட்டது என யாரும் நினைக்க வேண்டாம். என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது.
2026 இல் நிச்சயமாக தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சி அமைக்கும். பட்டி தொட்டி எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க போகிறேன். ஜெயலலிதா சாதி பார்க்காமல் பழகக்கூடியவர், அப்படி சாதி பார்த்திருந்தால் என்னுடன் பழகி இருக்கவே மாட்டார்.
திமுகவில் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே பதவி கிடைக்கும். அதிமுகவில் அப்படி இல்லை. சில சுயநலவாதிகளால் அதிமுக வீழ்ந்து வருகிறது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்க கூடாது என அதிமுக நிர்வாகிகள் குறித்து சசிகலா மறைமுக விமர்சனம் செய்தார்.
மேலும் எம்ஜிஆர் என்னுடன் பல விவகாரங்களை பேசி உள்ளார். இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாகிய அதிமுக சிலரின் சுயநலத்தால் வீழ்ச்சியடைந்தது. யாரையும் கட்சியிலிருந்து நீக்க கூடாது என்பதில் எம்ஜிஆர் கவனமாக இருப்பார். திமுகவின் வாரிசு அரசியல் போல் நம் கட்சி இல்லை. நமது கட்சியில் சாதாரண தொண்டர்கள் கூட எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம் என பேசினார்.