முதல்வர் ஸ்டாலின் இரங்கல் திருப்பூரில் பல பிஞ்சு உயிர்களை காப்பாற்றி உயிர்விட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் மலையப்பன் மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் பள்ளி வேனை ஓட்டிவந்த மலையப்பன், நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீயரிங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்” என்று பதிவிட்டுள்ளார்.