நம் உடலில் உப்பு அளவுக்கு அதிகமாக சேரும் போதோ அல்லது அது கரையகூடிய தன்மை குறைவாகும் போதோ சிறுநீரக கற்கள் உருவாகின்றன
சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய காரணம்
இந்தியாவில் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைமுறை, மரபணு மற்றும் வானிலையை பொறுத்து சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரிக் ஆசிட் மற்றும் தொற்றை ஏற்படுத்தும் ஸ்ட்ரூவைட் போன்றவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். மேலும் பெரும்பாலான மக்கள் கடுமையான வெயில் காலத்திலும் கூட குறைவாகவே தண்ணீர் அருந்துகிறார்கள். சிறுநீரக கற்கள் வர இதுவும் ஒரு காரணம்.
அதிகப்படியான இறைச்சி உணவுகள்
அதிகப்படியான விலங்குகளின் கொழுப்பு உடலில் சேரும்போது யூரிக் ஆசிட் கற்கள் உருவாக காரணமாகிறது. அதிக உப்பு நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் குடல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஆக்ஸலேட் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
சிறுநீர் பாதை தொற்றுள்ளவர்கள் : சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிலருக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. எனினும் அதே புவியியல் பகுதியில் இருந்தாலும், உணவுப் பழக்கத்தை கடைபிடித்தாலும் பலருக்கு சிறுநீரக கற்கள் உருவாவதில்லை. இது ஏனென்றால் மரபணு ரீதியாகவும் ஒரு சிலருக்கு சிறுநீரக கற்கள் வர அதிக வாய்ப்புள்ளது.
சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த உப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். தினமும் குறந்தப்பட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். சிறுநீரை எக்காரணம் கொண்டும் அடக்கி வைக்காதீர்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் நமது உடலில் சிட்ரேட் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இறைச்சி உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள். உங்கள் உடல் எடையை சரியாக பராமரியுங்கள். நன்றாக உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இவையெல்லாம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பவை.