அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அதேநேரத்தில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார். இதனிடையே குண்டு அடிபட்டதை தொடர்ந்து, ரத்தம் கொட்ட ஆக்ரோஷமாக அவர் கோஷம் எழுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விளக்கமாக பதிவிட்டுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு சத்தம் கேட்டதாகவும், உடனே வலது காதின் மீது குண்டு பட்டு ரத்தம் கொப்பளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கு ட்ரம்ப் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.