சமீபகாலமாக சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவுகளில் சிறுதானியங்களை சேர்த்து வருகின்றனர். சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் அளவிட முடியாதவை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும்.
இத்தகைய சிறுதானியங்களில் கம்பு முக்கியமானது. கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அடை என பலவிதமான கம்பு மூலம் செய்யப்படும் உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மற்ற சிறு தானியங்களைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.
பருவமடைந்த பெண்களுக்கு
கம்பு பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மாதத்தில் நான்குமுறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்வது பெண்களுக்கு நன்மை தரும். மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்து கொடுப்பதன் மூலம் இவை குறையலாம். அதே நேரம் கம்பு உடன் மோர் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்த்தும் சாப்பிடலாம்.
தாய்ப்பால் சுரக்கும்
பிரசவத்துக்கு பிறகு பெண்கள் பலவீனமாக இருப்பார்கள். அதனால் அவர்கள் சத்தான உணவு எடுத்து கொள்வது நல்லது. மேலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவிலுள்ள சத்துக்கள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும். எனவே பிரசவித்த பெண்கள் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அப்படி பார்க்கையில், பிரசவித்த பெண்கள் கம்பு உணவு எடுத்துகொள்ளும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அதோடு ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் அவர்கள் சோர்வு இல்லாமலும் இருப்பார்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு
கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது. கம்பு லோகிளைசெமிக் தன்மை கொண்டது என்பதால் இதை நீரிழிவு நோயாளிகள் எடுத்துகொள்ளலாம். கம்பு நார்ச்சத்தும் நிறைந்தது. அரிசி போல் இல்லாமல் உமி நீக்கிய பிறகும் கம்பின் உள்ளே நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள அமைகோஸ் அமைலொபெக்டின் அரிசியை காட்டிலும் மாறுபட்டது. இது செரிமானத்தை தாமதமாக்குகிறது. அதனால் ரத்தத்தில் கலக்கும் போது இது மெல்ல மெல்ல சேர்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது.
எடை குறைக்க
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவாகும். இதில் கொழுப்பு குறைவான அளவே உள்ளது. கம்பை கூழாக குடித்து வரும்போது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வது சிறந்த பலனளிக்கும்.
செரிமான பிரச்சனைக்கு
வயிற்றுப்புண், செரிமானக்கோளாறுகள் போன்ற பிரச்சனை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு வேளை கம்பு உணவை எடுத்துகொண்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி செரிமானம் துரிதமாகும். கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனையையும் உருவாக்காது. இது குடலை சுத்தம் செய்ய கூடியது என்பதால் குடல் புற்றுநோயை தடுக்கவும் உதவும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
ரத்த அழுத்தம்
கம்பு இரத்தத்தை தளர்த்தி ஆக்ஸிஜனை அதிகப்படுத்த செய்கிறது. உயர் ரத்த அழுத்தம் உண்டாகாமல் தடுக்கிறது. இது ரத்தத்தை தூய்மையாக்கி உடலை ஆற்றலுடன் செயல்பட செய்கிறது. உடல் சுறுசுறுப்பாக இயங்க கம்பு துணைபுரிகிறது.