புதுடெல்லி :
பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் கங்கனா ரனாவத். இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த பெண் காவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்,ஆத்திரமடைந்த பெண் காவலர் ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகளின் போராட்டத்தின் போது அவர்களுக்கு எதிராக ரனாவத் வெளியிட்ட பதிவுகள்தான் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று சிஐஎஸ்எஃப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது போராட்ட களத்தில் உள்ள வயதான பெண்கள் 100 ரூபாயை வாங்கிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக ஊடகத்தில் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்தப் பதிவை நீக்கினார். இதுதொடர்பாகத்தான் ரனாவத்துக்கும், பெண் காவலருக்கும் இடையே தற்போது மோதல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் கூறுகையில், “ 100 ரூபாய் வாங்கிக் கொண்டு பெண் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ரனாவத் கூறுகிறார். என் தாயாரும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். விவசாயிகளை இழிவுபடுத்தும் ரனாவத் வந்து அந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவாரா’’ என்று கூறியிருந்தார்.