‘இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்ப சிறிய துகள் போல் காணப்படும் எள்ளில் ஏராளமான பலன்கள் உள்ளன. ஒல்லியாக உள்ளவர்கள் அன்றாட எள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். மேலும் எலும்பு வளர்ச்சிக்கான அதிகப்படியான சத்தும் கிடைக்கும்.
இது தவிர, நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி இவற்றை சேர்த்து கொள்வது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு தாராளமாக சேர்த்து கொள்ளலாம். ஏனென்றால் இவை பால் உற்பத்தியை மேம்படுத்த உதவுகின்றன.
இது ஒருபுறம் இருக்க எள்ளில் தயார் செய்யப்படும் உருண்டைகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். இவற்றில் இனிப்பு சேர்க்கப்படுவதால் அவர்கள் விரும்பி உண்பார்கள்.அப்படி குழந்தைகள் விரும்பி உண்ணும் எள் உருண்டைகளை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1/4 கிலோ – எள் (சுத்தமானது)
1/4 கிலோ – வெல்லம் (தட்டி உதிர்த்தது)
1 1/1 டேபிள் ஸ்பூன் – நல்லெண்ணெய்
செய்முறை
சுத்தமான 1/4 கிலோ எள் எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு வறுக்கவும். பிறகு அவற்றில் மிக்சியில் இட்டு நொறுநொறுப்பாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றோடு வெல்லம் சேர்த்து மீண்டும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
இப்போது அரைத்த எள் வெல்லம் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். ஒருவேளை எள்ளில் எண்ணெய் பசை இல்லையென்றால் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து மிக்சியில் அரைத்து உருண்டையாக பிடிக்கலாம். இவற்றை சில மணி உலர வைத்து வீட்டாரோடு சுவைக்கலாம்.