2024 டி20 உலகக் கோப்பை தொடரில்,முதல்முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி வரலாறு படைத்துள்ளது. இதனால் அந்த அணியின் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். குறிப்பாக, ஆப்கான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரஷித் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ், குல்பதின் நயிப் ஆகியோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இதனிடையே அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கான் அணிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில், முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஃப்கன் அணி. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று ஆஃப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆப்கான் அணியில் குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். மேலும் ரஷீத் கான் 19 ரன்களும், இப்ராகிம் சத்ரான் 18 ரன்களும் எடுத்தனர். பின்னர் 116 ரன்கள் இலக்குடன் களமிறங்கி வங்கதேச அணி ஆடியபோது மழை குறுக்கிட்டது.
இன்னிங்ஸ் மழை காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆகையால் 19 ஓவர்களில் 114 எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஆப்கான் அணியில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் மற்றும் ரசித் கான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.