டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 8ல் வீழ்த்தியதன் மூலம், ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் பழிவாங்கியுள்ளதாக ரசிகர்கள்
கூறிவருகின்றனர். 2023 நவம்பரில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஸி.யிடம் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் வெல்லும் வாய்ப்பு இருந்தும், மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்தால் ஆப்கானிஸ்தான் அணி கோட்டைவிட்டது. அந்த போட்டியில் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச்சை முஜீப் உர் ரஹ்மான் தவறவிட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற T20 WC போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி அந்த தோல்விக்கு பழிவாங்கியுள்ளது.
கிங்டவுனில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 148/6 ரன்கள் எடுத்தது. ஆப்கான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராகிம் சத்ரான் 51 ரன்களும் எடுத்தனர். பின்னர் 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.