தினை அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும்
சிறுதானியங்களில் தினை மிகவும் சுவையான ஒரு தானியமாகும். குறிப்பாக இனிப்பு வகைகள் செய்ய தினையரிசியைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். தினை அரிசியில் நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
தினையரிசியில் கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், மக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
இதிலுள்ள நார்ப்பொருள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும். ஒருவேளை உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் தினையில் செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருள்கள் :
தினையரிசி – 1 கப்,
வெல்லம் – ஒன்றரை கப்,
ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன்,
பால் – 2 கப்,
தேங்காய் துருவல் – கால் கப்,
உலர் திராட்சை – 20,
முந்திரி – 15,
பாதாம் – 15,
நெய் – 50 மில்லி,
செய்முறை :
தினையரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து, 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.ஒரு குக்கரில் ஊறவைத்த தினையரிசியை சேர்த்து, அதில் எடுத்து வைத்திருக்கும் பாலையும் அதோடு ஒரு கப் பாலும் சேர்த்து குக்கரில் 5-6 விசில் வரை வைத்து இறக்குங்கள்.
ஒரு கடாயில் வெல்லத்தைச் சேர்த்து அதில் அரை டம்ளர் மட்டும் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.எடுத்து வைத்திருக்கும் வெல்லப்பாகை வேகவைத்த தினையரிசியில் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.
வெல்லமும் அரிசி கலவையும் ஒன்றாகச் சேர்ந்து வேகும்போது அதில் ஏலக்காய் பொடியும் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து கலக்குங்கள்.மற்றொரு கடாயில் நெய் சேர்த்து அதில் உலர் திராட்சை, முந்திரி, உடைத்த பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, பொங்கலில் கொட்டுங்கள்.
துருவிய தேங்காயையும் நெய்யில் சேர்த்து வதக்கிக் கொட்டினால் சுவையான தினையரிசி பொங்கல் ரெடி.