அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அதேநேரத்தில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார். இதனிடையே குண்டு அடிபட்டதை தொடர்ந்து, ரத்தம் கொட்ட ஆக்ரோஷமாக அவர் கோஷம் எழுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நண்பரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து கவலையுற்றேன். இச்சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. ட்ரம்ப் விரைந்து குணமடைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.