நாம் தமிழர் நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் குற்றாலத்தில் வைத்து கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய திருச்சி சைபர் கிரைம் போலீசார், குற்றாலத்திற்கு சென்ற துரைமுருகனை தேடிச் சென்று கைது செய்தனர்.
சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன் சாட்டை துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறி விடுவிகப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், இன்று காலை கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்க திருச்சி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் விடுவிக்கப்பட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திட்டமிட்டு தன்னை கொல்ல முயல்வதாக தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டினார்.