வி.கே சசிகலா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ம.சுரேஷ், பிரவீன், த.சுரேஷ், சேகர், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, மணி, வடிவு ஆகிய 9 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. இதுவரை 65க்கு மேற்பட்டவர்கள் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரியவருகிறது. சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதேபோன்று கடந்த ஆண்டு மே மாதம் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு நாட்களிலேயே 21 நபர்கள் பலியாகினர். திமுக தலைமையிலான அரசு இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் இத்தகைய மரணங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. தடுத்து நிறுத்தவேண்டிய திமுக தலைமையிலான அரசோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் அலட்சியப்போக்காலும், மக்களை பாதுகாக்கக்கூடிய எந்தவித நடவடிக்கைகளை எடுக்காததினாலும் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம் என்று வேதனையாக இருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தேவையான நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.