2024 டி20 உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 53 பந்துகளில் 98 ரன்களும், சார்லஸ் 43 ரன்களும், ரோவ்மன் பவல் 26 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 38 ரன்களும், ஓமர்சாய் 23 ரன்களும் எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய லீக் போட்டியில் நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. நாளை முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர் அடித்த வீரர் எனும் கிறிஸ் கெய்லின் சாதனையை நிக்கோலஸ் பூரான் முறியடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் கிறிஸ் கெய்ல் (124 சிக்சர்) சாதனையை நிக்கோலஸ் பூரன் (128 சிக்ஸர்) முறியடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக எவின் லூயிஸ் (111) பொல்லார்டு (99), ரோவ்மன் பவல்(90) உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து உள்ளனர்.