அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அதேநேரத்தில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார். இதனிடையே குண்டு அடிபட்டதை தொடர்ந்து, ரத்தம் கொட்ட ஆக்ரோஷமாக அவர் கோஷம் எழுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை நோக்கி பாய்ந்துவந்த புல்லட், போட்டோ ஒன்றில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. நூலிழையில் தவறிய அத்தோட்டா, ட்ரம்பின் காதுகளை பதம் பார்த்தது. இன்னும் இரண்டு இஞ்ச் விலகியிருந்தால் கூட தோட்டா ட்ரம்ப்பின் தலையில் பாய்ந்திருக்கும். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்று அந்நாட்டு FBI அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.