செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்தது. இந்த இரு பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மதுராந்தகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் விபத்தில் சிக்கிய பேருந்துகளை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.