புதுமுக நடிகர்கள் மற்றும் கஞ்சா கருப்பு இணைந்து நடித்த நம்பர் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் இளைஞர்களின் கதை படமாக்கப்பட்டுள்ளது. கதையின்படி மிகப்பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்ஷிணாமூர்த்தி ஒரு விபத்து காரணமாக படுகாயம் அடைந்து சரியாக நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இதனால் குப்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுக் கொடுத்து அவர்களை முன்னேற்ற நினைக்கிறார். அந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் சரத் அய்ரா என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனால் கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மதன் தக்ஷிணாமூர்த்தி கொடுக்கும் பயிற்சியில் முழு ஈடுபாடுடன் இளைஞர்கள் கால்பந்தாட்டத்தை விளையாட துவங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கால்பந்து கமிட்டியில் இந்த இளைஞர்களின் சிலர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆனால் இதனை விரும்பாத வில்லன் அடிமட்டத்தில் இருப்பவர்கள் எப்படி மேலே வரலாம் என்று அந்த அணியில் இருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படாமல் செய்கிறார். இதனால் இளைஞர்களின் நிலை என்ன ஆகிறது இறுதியில் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் மீதி கதையாக உள்ளது.
கதாநாயகனாக நடித்திருக்கும் சரத் கோபம் காதல் என அனைத்திற்கும் ஒரே முக பாவணியை கொடுத்து ரசிகர்களை சலிக்க செய்துள்ளார். நாயகி அய்ரா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக நடித்துள்ளார். கஞ்சா கருப்பு மற்றும் மதன் தக்ஷிணாமூர்த்தி தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். அதோடு படத்தில் பல புது முகங்கள் என்பதால் யாருடைய நடிப்பும் கவனத்தை பெறவில்லை.
திறமை இருந்தும் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்து வரும் இளைஞர்கள் எப்படி ஒரு விளையாட்டு துறையில் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து எஸ் ஹரி உத்ரா படத்தை இயக்கியிருக்கிறார். அலிம்மிஸ்ராக் இசையில் வெளியான பாடல்கள் அதிகளவு பேசப்படவில்லை. மொத்தத்தில் சுமாரான படம் என்று தான் பலரும் கூறுவார்கள்.