ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளதால் இடைத்தேர்தலில் புறக்கணிக்கிறோம். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இல்லை என்றும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். பணபலம், படை பலத்துடன் அராஜகங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுகவை பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளி உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், பாஜகவின் பலத்தை கண்டு அதிமுக பயப்படுவதாகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலை அம்பலப்பட்டு விடும் என்ற பயத்தில் அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக போராட்ட குணத்தை இழந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.