கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தல் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தி கொடுத்த இனிப்பு கணிப்புகளை பொய்யாக்கி விட்டது. 8 முறை வந்து பிரதமர் மோடி கட்டமைத்ததை ராகுல் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தகர்த்து விட்டார். ராகுல் காந்தி எனக்கு வாங்கி கொடுத்த ஸ்வீட் தேர்தல் வெற்றியை இனிப்பாக மாற்றியது.
2004 மக்களவைத் தேர்தலில் கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. மக்களவைத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. புதிய வரலாற்றை படைப்பதற்கு கிடைத்த வெற்றி. நம் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கான பாராட்டு விழா அல்ல, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கான பாராட்டு விழா என்றார்.
மேலும் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். அரசமைப்பு சட்டத்தை அழிக்க நினைத்தவர்களை தலை வணங்க வைத்துள்ளோம். கொள்கை உணர்வோடு கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் மாபெரும் வெற்றி சாத்தியமாகியுள்ளது.
2024 இல் பெற்றிருக்கும் திமுகவின் வெற்றி அரசு மீதுள்ள திருப்தியால் கிடைத்த வெற்றி. திமுகவின் கொள்கை கூட்டணியாலேயே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது என்பது பிரதமர் மோடியின் தோல்வி என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
தொடர்ந்து வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை. 40 எம்பிக்களும் நாடாளுமன்ற கேண்டினில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர். திமுகவின் 40 எம்பிக்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள். தமிழக எம்பிக்களின் குரல் இனி வலுவாக நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கப்போகிறது.
சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமாரின் கூட்டணியால் தான் மோடியால் பிரதமராக பதவி ஏற்க முடிந்தது. பல்வேறு விஷயங்களை கையில் எடுத்தும் பாஜகவால் 400 இடங்களில் வெல்ல முடியவில்லை என தெரிவித்தார்.