மத்திய வரவு-செலவுத் திட்டம் குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி அவர்களின் தலைமையில் மூன்றாவது முறை ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை, மக்களுக்கு ஆதரவான நிலையில் மத்திய அரசு இருப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஒளிர்கிறது என்றும், இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து ஒளிரும் என்றும் கூறப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏழை, மகளிர், இளைஞர் மற்றும் விவசாயி ஆகியோர்மீது மத்திய அரசு மிகுந்த கவனத்தைச் செலுத்தியிருப்பதை நான் வரவேற்கிறேன். வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் நடுத்தர மக்களின்மீது மத்திய அரசு தனிக் கவனம் செலுத்துவது, இந்திய நாட்டை நிச்சயமாக முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
வேளாண் ஆராய்ச்சியை உருமாற்றுதல், புதிய ரகங்களை வெளியிடுதல், இயற்கை விவசாயம், பருப்புவகைகள் மற்றும் எண்ணெய்வித்துகள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல், காய்கறி உற்பத்தி மற்றும் அதனை விநியோகிக்க சந்தை மையங்களை உருவாக்குதல், வேளாண்மைக்கான எண்ணிம பொதுக் கட்டமைப்பினை ஏற்படுத்துதல் போன்ற முன்னோடி திட்டங்கள் வேளாண்மைத் துறையில் இந்தியா தன்னிறைவைப் பெற நிச்சயமாக வழிவகுக்கும். கூட்டுறவுத் துறையில் முறையான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தேசிய கூட்டுறவுக் கொள்கை என்ற அறிவிப்பினை நான் வரவேற்கிறேன்.
அமைப்பு ரீதியிலான அனைத்துத் துறைகளிலும் புதிதாக வேலையில் சேர்வோருக்கு ஒரு மாத சம்பளமாக 15,000 ரூபாய் வரை மூன்று தவணைகளில் வழங்குதல்; உற்பத்தித் துறையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி செலுத்தும் குறிப்பிட்ட நிலைகளில் பணிபுரிவோர் மற்றும் வேலையளிப்போருக்கு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை, கூடுதலான நபர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் 3,000 ரூபாய் வரை ஊழியர் வருங்கால வைப்பு நிதியினை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குதல் மற்றும் மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 பெரிய நிறுவனங்களில் அளித்தல் போன்ற கருத்துருக்கள் பாராட்டக்கூடியவை. இது ஒருவிதமான நம்பிக்கையை இளைஞர்களிடையே உருவாக்கும் என்பதோடு, இதன்மூலம் இளைஞர்கள் இந்த நாட்டின் சொத்தாக மாற்றப்படுவார்கள்.
இதேபோன்று, பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் மூன்று கோடி கூடுதல் வீடுகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் தொகுப்பு, முத்ரா கடனை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துதல், உற்பத்தித் துறைக்கு கடன் உறுதித் திட்டம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாடகை குடியிருப்புத் திட்டம், மகளிர் வாங்கும் வீடுகளுக்கு குறைவான முத்திரைத் தீர்வை, 10 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன், நகரங்களில் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடு, மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு, சில பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி குறைப்பு, ஏஞ்சல் வரி ரத்து போன்றவை போற்றத்தக்கது.
இடர்ப்பாடுகள் உள்ள நிலையிலும், புதிய வருமான வரித் திட்டத்தின்கீழ், தனி நபர் வருமான வரிக்கான நிரந்தரக் கழிவினை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான கழிவினை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியதோடு, வருமான வரி படிமுறைவீதத்தில் சில சலுகைகளையும் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் வழங்கியிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும். நான் இந்த அறிவிப்பினை வரவேற்கிறேன்.
பொருளாதாரத்தில் முக்கியக் கவனத்தை செலுத்தும் அதே நேரத்தில் மக்களின் அதிக எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய, மிகவும் பொறுப்பு வாய்ந்த அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான வலுவான ஆதாரத்தை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.