அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பேசிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் ட்ரம்பின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர். அதேநேரத்தில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ட்ரம்புக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.