அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய, மாநில அரசுகள் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சனையில் தொடர்ந்து கபட நாடகமாடி வருவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு. சோமண்ணா அவர்களை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.
ஏற்கனவே காவிரி மேகதாது பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.