போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக்கின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து இயக்குநர்
அமீரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்ததாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அமீர், இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து என்னையும் கைது செய்ய வேண்டும் என விரும்புவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள, வலையொலி உள்ளிட்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம், போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (23.07.24 ) அன்று தினத்தந்தி, தினமலர், News7 உள்ளிட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே தங்களது நன் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர, வெறொன்றும் கிடைக்கப் போவது இல்லை.
இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே NCB மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை நான் வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைதள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார். சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்ட இது போன்ற நபர்கள், “இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து..” எப்படியாவது இந்த வழக்கில் என்னைச் சேர்த்துக் கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன்?
மத்திய, மாநில அரசுகளோ, தனி நபரோ மானுடம் கொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம், ஒரு சக மனிதனாக, தோழனாக, சுயநல நோக்கின்றி எனது எதிர் கருத்துகளையும், போராட்ட செயல்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளேன் என்பதைத் தவிர என்னிடம் வேறு குறைகள் ஏதும் இல்லை.
என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சிந்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு – அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல.! என்பதையும், எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ நான் ஒரு போதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள, பொறுப்புள்ள ஊடகங்கள் தங்களது ஊடக தர்மத்தை மறந்து நேர்மைக்கு மாறாக இது போன்ற செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிட வேண்டாம் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மனிதத்தை விதைப்போம்.!” என தெரிவித்துள்ளார்.