விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கு மேலிட உத்தரவே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை வெற்றி பெறச் செய்யவே அதிமுக தேர்தலை புறக்கணித்து இருப்பதாக கூறிய அவர் மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுவதற்கு இதுவே சான்று என்றும் சாடினார். மேலும் இந்தியா கூட்டணியினர் திமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இல்லை என்றும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். பணபலம், படை பலத்துடன் அராஜகங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என ஈபிஎஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.