முதல் கடவுள் என்றால் முதலில் தோன்றிய அல்லது முதலில் வணங்க வேண்டிய கடவுள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு முழு முதல் கடவுள் என்று அழைக்க வேண்டும்?! இதில் தான் விநாயகர், ஆனைமுகத்தோன், பிள்ளையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் விண்ணின் நாயகனான தலைவனின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
இவரைக் காண நாம் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று வணங்க வேண்டியதில்லை. தெரு முனைகளில் மரத்தடியின் கீழ் கருணையுடன் நமக்காகக் காத்திருப்பார். குறிப்பாக அரச மரத்தடியின் கீழ் அமர்ந்திருப்பார். படிப்பு நல்லா வரனுமா? குழந்தை வரம் வேணுமா ? காரியத் தடைகள் உடையனுமா ? 108 குடம் தண்ணீர் எடுத்து விநாயகர் சிலைக்கு ஊற்று. அரச மரத்தை 108 சுத்து சுத்து முடியலைன்னா 3 சுத்தாவது சுத்து என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படித் தண்ணீர் குடம் குடமா அந்தக் கல் சிலை மேல ஊத்தி, மரத்தை சுத்தினா குழந்தை வரம் எப்படிக் கிடைக்கும் ? சுத்தப் பேத்தல், மூடநம்பிக்கைன்னு நம்மில் பலர் நினைக்கக் கூடும். ஆனா, ஆறு அல்லது குளத்தில் இருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துக் கொண்டு நடந்து வந்து நடந்து வந்து விநாயகர் சிலை மீது ஊற்றுவது உடல் பயிற்சி. மூச்சு மேலும் கீழும் வாங்கும். கெஸ் வாங்குதுன்னு சொல்வாங்க இல்ல, அது போல இப்படி மூச்சை அதிக அளவில் நாம் நுரையீரலுக்குள் செலுத்துகிறோம். அதுவும் அரச மரத்தினடியில். அரச மரம் எனும் பிராணக் காற்றை அதிகம் வெளியிடக்கூடிய ஒரு மரம். இதனால் நாம் அதிக அளவில் ஆக்சிஜனை நம் உடலுக்குள் அனுப்புகிறோம்.
இதனால் மூளை தொடங்கி கால் பாதம் வரை தூய்மையான ஆக்சிஜன் சென்று சேரும். உடலும், உள்ளமும் உறுதியும், புத்துணர்வும் பெறும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் கல்வி கற்கத் தேவையான ஞாபக சக்தியைத் தரும். குழந்தை வரம் வேண்டுபவருக்கு மூச்சின் சுவாச முறைகளை ஒழுங்கு படுத்தி உடல் உள்ளத்தினை வளப்படுத்தும்.
உண்மையைக் கூறினால் மூச்சுப் பயிற்சியின் ஒரு அங்கம்தான் இந்த விநாயகர் – அரசமரம் – தண்ணீர் – சுற்றுதல் – வணங்குதல் எல்லாம். உணவு தண்ணீர் இல்லாம ஒரு குறிப்பிட்ட காலம் இருக்க முடியும். ஆனால் மூச்சு விடாம 5 நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்காது. உயிர் ஆட்டம் காட்டிடும். அதனால்தான் மூச்சு எனும் முழுமுதல் கடவுளாகிய விநாயகனை வணங்குகிறோம். வணங்கி நல்ல மூச்சு, நல்ல புத்தி, நல்ல உடல், மன நலம் கொடுன்னு வேண்டுறோம்.
விநாயகரை முதலில் வணங்கித்தான் பல சித்தர்களின் பாடல்களே தொடங்குகின்றன.