கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலி என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பிரவீன், சுரேஷ், சேகர் உள்ளிட்ட 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அதை அருந்தினார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்த சிறிது நேரத்தில் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு, கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் துடிதுடித்து பலியானதாக கூறப்படுகிறது. கருணாபுரத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர் என ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். ஆட்சியர் கூறியதாவது, குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவரோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. வயிற்றுப்போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு இந்த தகவலை கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.