T20 உலகக் கோப்பை தொடரில், முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஃப்கன் அணி. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று ஆஃப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆப்கான் அணியில் குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். மேலும் ரஷீத் கான் 19 ரன்களும், இப்ராகிம் சத்ரான் 18 ரன்களும் எடுத்தனர். பின்னர் 116 ரன்கள் இலக்குடன் களமிறங்கி வங்கதேச அணி ஆடியபோது மழை குறுக்கிட்டது.
இன்னிங்ஸ் மழை காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆகையால் 19 ஓவர்களில் 114 எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஆப்கான் அணியில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் மற்றும் ரசித் கான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
2014 டி20 உலக கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரிய அணிகள் சூப்பர்8ல் வெளியேறி உள்ளது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் அவரிடம் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் எவை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நிச்சயம் ஆஸ்திரேலியா செல்லும். மற்ற அணிகள் குறித்து கவலை இல்லை” என்று பதிலளித்தார். இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.