2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி எந்தவித பரபரப்பும் இல்லாமல் முடிந்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் வெறும் 56 ரன்களில் சுருண்டதால் தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அந்த அணியின் ஹெண்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 29* ரன்கள் எடுத்தார்.
பல ஆண்டுகளாக வலுவான அணியாக திகழும் தென் ஆப்பிரிக்கா இப்போதுதான் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால், அதுதான் நிஜம். தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதியில் ராசியே இல்லை என்று பல சொல்லி கேட்டிருப்போம். அந்த கூற்றை பொய்யாக்கி நடப்பு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியைஎட்டியிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.