‘உயர் ஜாதி தலைவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர்களாகிவிட்டனர். தலித்துகள் பாஜகவை ஆதரிக்கவில்லையா? நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன்’ என விஜயபுரா பாஜக எம்பி ரமேஷ் ஜிகஜினகி கூறினார்.
உயர்சாதியை சேர்ந்தவர்களுக்குத் தான் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக பாஜக எம்பியும், தலித் தலைவருமான ரமேஷ் ஜிகாஜினகி தெரிவித்துள்ளார். பாஜக பட்டியலினத்தோருக்கு எதிரான கட்சி என பலரும் தன்னிடம் கூறியதாகவும், கட்சியில் சேரும் முன்பே இதை தான் உணர்ந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பட்டியல் சாதி மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் பதவியை மறுத்ததன் மூலம் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக விஜயபுரா பாஜக எம்பி ரமேஷ் ஜிகஜினகி தனது சொந்த கட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தார். செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்தியாவில் இருந்து ஏழாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் தலைவர் தான் என்று கூறினார்.
அனைத்து உயர் ஜாதித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களாகிவிட்டனர். தலித்துகள் பாஜகவை ஆதரிக்கவில்லையா? எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. ஆனால், எனது தொகுதி மக்களின் விருப்பம், அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும் என்பதுதான். தலித்களுக்கு எதிரான கட்சி என்று கருதி எனது நண்பர்கள் பலர் பாஜகவில் சேர வேண்டாம் என்று என்னிடம் வாதிட்டனர்.
32 ஆயிரம் கோடி SEP மற்றும் TSP நிதியை தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக மாநில அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய அவர், உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த நிதியை மாற்றுவது நியாயமற்றது என்று கூறினார்.
சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தும், வேறு சில நோக்கங்களுக்காக நிதியை மாற்றுவதை எதிர்க்காதது நல்லதல்ல. காங்கிரஸ் கட்சி பல ஊழல்களுடன் பிறந்து வளர்ச்சியை நிறுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.