ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் தப்பி ஓட முயற்சித்தார் என்று காவல்துறை சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவேங்கடம் இன்று காலை போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிலையில், ஏதோ உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பதாக அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். வழக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். ” என தெரிவித்துள்ளார்.