ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்தின் “தேவைகளை உணர்ந்து” புதிய தலைநகர் அமராவதி உட்பட மாநிலத்தில் பல முன்னேற்றங்களுக்கு நிதி ஒதுக்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். வென்டிலேட்டரில் இருந்த தங்கள் மாநிலத்திற்கு, தற்போது ஆக்சிஜன் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடக்கமே என்றும் கூறியுள்ளார். ஆந்திராவை மறுகட்டமைக்க மத்திய அரசு செய்யும் இத்தகைய உதவிகள் தொடரும்
எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு எக்ஸ் இல் ஒரு பதிவில், ” எங்கள் மாநிலத்தின் தேவைகளை அங்கீகரித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி அவர்களுக்கு ஆந்திரப் பிரதேச மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 24-25 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் தலைநகரம், போலவரம், தொழில்துறை முனைகள் மற்றும் ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.”
“மத்திய அரசின் இந்த ஆதரவு ஆந்திர பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நீண்ட தூரம் செல்லும். இந்த முற்போக்கான மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்,” என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகளை அறிவித்தார், 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது அமராவதியின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடியை அறிவித்தது குறிப்பிடத்தத்தக்கது.