பாஜக முன்னாள் எம்.பி., மாஸ்டர் மதன் (93) உடலுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்த மாஸ்டர் மாதன், 1998 மற்றும் 1999-2004 வரை நீலகிரி தொகுதி எம்.பியாக இருந்தவர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு அவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஐயா மாஸ்டர் மாதன் அவர்கள் இல்லத்துக்கு, மாண்புமிகு ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத் துணைநிலை ஆளுநருமாகிய திரு. சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் சென்று, அவரது பூதவுடலுக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினோம்.
திரு. மாஸ்டர் மாதன் அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டோம். அவரது கொள்கைப் பிடிப்பும், பொதுமக்களுக்கான அயராத உழைப்பும், தேசப்பணியில், எங்களை வழிநடத்தும் சக்தியாகத் தொடரும்” என தெரிவித்துள்ளார்.