தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் முக ஸ்டாலின் இம்மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், புதுத்தொழில் ஈர்க்க அமெரிக்கா செல்வதை விட இருக்கும் பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதே அறம் என தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பதிவில், “நடுக்கடலில் கப்பலை மூழ்கடித்து கடுங்கொலை! மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது! இங்கிருக்கும் பாஜக-திமுக அரசுகள் உறங்குகிறது! மீன் கொண்டு வந்து ஊருக்கு உணவளிக்கும் மீனவனையே கொன்று மீனுக்கு இரை போட்டுள்ள இலங்கை கடற்படையின் கொடுஞ்செயலுக்கு மோடி அரசும் ஸ்டாலின் அரசும் என்ன நீதியை பெற்றுத் தரப்போகிறது?
இந்தியா-இலங்கை கிரிகெட் தொடர் தோல்விக்கு மீனவர் உயிரை பறித்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது! இறந்துள்ள மலைச்சாமியின் உடலையும் மீதமுள்ள மீனவர்களையும் மீட்டு வர இரண்டு அரசும் இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுத்தொழில் ஈர்க்க அமெரிக்கா செல்வதை விட இருக்கும் பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதே அறம்!” என தெரிவித்துள்ளார்.