வயநாட்டில் நிலச்சரிவு பேரிடரால் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளதாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திய அவர், கேரள அரசுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் நடந்துள்ள நிலச்சரிவுப் பேரிடரால் 200க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையும் பெருந்துயர் நடந்துள்ளது. குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர். புதையுண்டு பலியானோரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
இப்பேரிடரை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ளோரின் ‘மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானம்’ ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.