ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளதால் இடைத்தேர்தலில் புறக்கணிக்கிறோம். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இல்லை என்றும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். பணபலம், படை பலத்துடன் அராஜகங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேரடியாக பாமகவை ஆதரிப்பதற்காகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். இடைத்தேர்தல்களை புறக்கணித்து வந்த பாமக தற்போது போட்டியிடுவதும், அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணிப்பதும் அவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது அதிமுக தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் என கூறியுள்ளார்.