தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். இதுகுறித்து பிரேமா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்க வேண்டிய தேர்தல். இன்றைய காலகட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரையம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.
இன்றைய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோம் என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டுமொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுகவும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.