நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து வரும் 24ஆம் தேதி சென்னையில் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 24ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் நடந்த மோசடி குளறுபடிகளை கண்டித்து போராட்டம் நடைபெறும் என மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்கிறது மத்திய பாஜக அரசு. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலை நாடு முழுவதும் பரவி இருக்கிறது.
ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்வி பயில விடாமல் ஓரங்கட்ட பாசிச பாஜகவால் கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் நீட்டில் 700க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றிருப்பது குளறுபடியை காட்டுகிறது. நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று மத்திய கல்வித்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். எத்தனை மரணம் நிகழ்ந்தாலும் நீட் தேர்வை நடத்திய தீருவேன் என எதேச்சதிகாரப் போக்கினை மத்திய அரசு கடைபிடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.