2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குள் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நிலையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்திருந்த நிலையில், அதனை ஏற்றது மக்களவை செயலகம்.
இந்நிலையில் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததற்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முன்னரே கூறியதாகவும், ரேபரேலியில் போட்டியிடுவதை அவர் வயநாடு மக்களிடமிருந்து மறைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாசிச சக்திகளை அழிக்க ராகுல் ரேபரேலியில் இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது தேர்தலில் அறிமுகமாகிறார்.