வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குள் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நிலையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.
எந்த தொகுதியை ராஜினாமா செய்யலாம் என்பது குறித்த ஆலோசனை காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில் காங்.மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு ராஜினாமா அறிவித்தார் ராகுல் காந்தி.
மேலும் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தபின் பேசிய ராகுல் காந்தி, “கடந்த ஐந்து ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த ஆதரவு அன்பு என்றும் மறக்க முடியாது. வயநாடு மக்களுக்கு நன்றி. வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து அங்கு சேவை செய்வேன். வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தாலும், நான் அடிக்கடி அங்கு செல்வேன். நானாக இருந்தாலும் எனது சகோதரியாக இருந்தாலும் சரி வயநாட்டிற்காக குரல் கொடுப்போம். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார்” என தெரிவித்தார்.