சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன் 2.. இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
இந்தியன் – 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின்படி, நாளொன்றுக்கு திரையரங்குகள் 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். ஆனால், லைகா தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு செவி சாய்த்து நாளை (12.07.2024) மட்டும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது.
இதனிடையே இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வர்மக்கலை, தற்காப்பு கலை அகாடமி ஆசான் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. வர்மக்கலை முத்திரையைத் தகுந்த அனுமதி பெறாமல் படக்குழு பயன்படுத்தியதாக ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் கமல், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உரிமையியல் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.