நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அறிவித்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால். எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வானது குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவராக ராகுலின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் ரேபரேலி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வென்றிருந்தார். வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்த நிலையில் ரேபரேலிஎம்.பியாக ராகுல் காந்தி இருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.