நியூயார்க் : இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் தோனியின் கேப்டன்சி சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் ரோஹித் சர்மா. இதுவரை இந்திய டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று கொடுத்த கேப்டனாக இருந்தார் தோனி. அவர் 72 போட்டிகளில் 42 வெற்றிகளை பெற்று கொடுத்து இருந்தார். அவரது அந்த சாதனையை ரோஹித் சர்மா வேகமாக நெருங்கி வந்தார். 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரை இறுதியுடன் தோல்வி அடைந்தது. அதன் பின் ஓராண்டாக அவர் சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனால், இனி தோனியின் கேப்டன்சி சாதனையை வேறு எந்த கேப்டனாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடக் கூட முடியாது என கருதப்பட்டது.
இனி இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா இடம் பெற மாட்டார் என நம்பப்பட்ட நிலையில், அவர் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய டி20 அணியில் மீண்டும் கேப்டனாக இடம் பெற்றார். உலகக் கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆப்கானிஸ்தான் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது தோனியின் 42 வெற்றிகள் என்ற சாதனையை சமன் செய்திருந்தார் ரோஹித் சர்மா. தற்போது 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது கேப்டனாக ரோஹித் சர்மாவின் 43வது வெற்றி ஆகும். இதன் மூலம் தோனியின் டி20 கேப்டன்சி சாதனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ரோஹித் சர்மா இந்திய அளவில் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
தோனி 72 போட்டிகளில் 42 வெற்றிகள் பெற்ற நிலையில் ரோஹித் சர்மா 55 போட்டிகளிலேயே 43 வெற்றிகளை பெற்று இருக்கிறார். தற்போது சர்வதேச அளவில் அதிக டி20 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 81 போட்டிகளில் 46 வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றிகள் (சூப்பர் ஓவர் வெற்றிகள் உட்பட)
- 81 போட்டிகளில் 46 வெற்றி – பாபர் அசாம் (பாகிஸ்தான்)
- 57 போட்டிகளில் 44 வெற்றி – பிரையன் மசாபா (உகாண்டா)
- 71 போட்டிகளில் 44 வெற்றி – இயான் மோர்கன் (இங்கிலாந்து)
- 55 போட்டிகளில் 43 வெற்றி – ரோகித் சர்மா (இந்தியா)
- 52 போட்டிகளில் 42 வெற்றி – அஸ்கர் ஆப்கான் (ஆப்கானிஸ்தான்)
- 72 போட்டிகளில் 42 வெற்றி – எம்எஸ் தோனி (இந்தியா)
- 76 போட்டிகளில் 41 வெற்றி – ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா)