சென்னை சேப்பாக் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகள் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். 197 பந்துகளில் 205 ரன்கள் அடித்த அவர் ஒரு ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். அதே சமயம் ஸ்மிருதி மந்தனா 149 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மேலும் ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். முதல்நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் ரிச்சா கோஷ் களமிறங்கி ஆடினர். தொடர்ந்து இருவரும் அவுட் ஆன நிலையில் இந்திய மகளிர் அணி 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய ஷஃபாலி 205, ஸ்மிருதி 149, ரிச்சா 86, ஹர்மன்பிரீத் 69, ஜெமிமா 55 ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில், டெல்மி டக்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 525 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் (575) அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை 2வது நாளான இன்று 51 ரன்களை கடந்து முறியடித்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில், இந்திய அணி 4 சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் ஆடி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி படைத்த 4 சாதனைகள் :
*டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் அதிக ரன்கள் (525)
*ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் (603)
*ஒரு இன்னிங்சில் குறைந்த ஓவர்களில் அதிக ரன்கள் (115.1 ஓவர் 603 ரன்கள்)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் ரேட்டுடன் (5.24) அதிக ரன்கள் குவித்த அணி (603 ரன்கள்).