பரபரப்பான 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம், T20 உலக கோப்பையில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியுள்ளது. பார்படாஸில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்களும், அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்களும், சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர்.177 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி பவுலர்கள் 169/8 ரன்னில் கட்டுப்படுத்தினர். தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கிளாஸன் அதிரடியாக 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். மேலும் டி காக் 39 ரன்கள் மற்றும் ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்திக் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். சாம்பியன் ஆன இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு $2.45 மில்லியன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.20.42 கோடி ஆகும். இரண்டாவது இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு $1.28 மில்லியன் (ரூ.10.67 கோடி) வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியை தழுவிய ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலா $7.87 மில்லியன் (36.5 கோடி) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.