இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதே திமுகவுக்கு முதல் வெற்றி என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தோல்வி பயத்தை மறைக்கவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என இபிஎஸ் விமர்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், இது போன்ற காரணங்கள் நகைப்பை வரவழைக்கிறது என்றார். மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததே தமிழகத்தின் சட்டம் – ஒழுங்குக்கு சாட்சி எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இல்லை என்றும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். பணபலம், படை பலத்துடன் அராஜகங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என ஈபிஎஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.