சாவர்க்கர் பெண் கல்விக்காக பாடுபட்டவர் என பேசியதற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்காரா விளக்கமளித்துள்ளார். சிறு வயதில் ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அப்படி கூறிவிட்டேன். அதன் உண்மையை சோதித்திருக்க வேண்டும். அது என்னுடைய மிகப்பெரிய தவறு தான். பிழையை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் பூலே ஆகியோருக்கு, நான் என்றும் தலை வணங்குகிறேன் என்றார்.
இயக்குநர் சுதா கொங்காரா தனது எக்ஸ் பதிவில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.