தமிழகத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாபுரத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருணாபுரம் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருணாபுரம் பகுதியில் இருக்கக்கூடிய பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி பாதித்தவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஏ.வ வேலு உள்ளிட்டோரும் உடன் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி கேட்டார். இதனிடையே கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.